
Trust & Safety
ஜம்ப்டு டெபாசிட் மோசடிகள்: உங்கள் UPI PIN-ஐ எப்போது உள்ளிட வேண்டும் என்பதைத் தெரிந்துகொள்ளுங்கள்
PhonePe Regional|3 min read|25 February, 2026
உங்கள் பணத்திற்கும் எந்தவொரு பரிவர்த்தனைக்கும் இடையிலான இறுதி பாதுகாப்பு அரண் உங்கள் UPI PIN தான். ஒவ்வொரு முறை அதை உள்ளிடும்போதும், உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணம் வெளியேறுவதற்கு நீங்கள் ஒப்புதல் அளிக்கிறீர்கள் – இதனால்தான் ஒவ்வொரு பரிவர்த்தனைக்கு முன்பும் சற்று நேரம் எடுத்து விவரங்களைச் சரிபார்ப்பது மிகவும் முக்கியம். ஆனால், அன்றாடப் பரபரப்பான வாழ்க்கையில் பலரும் இந்தச் சிறிய விஷயத்தை மறந்துவிடுகிறார்கள். வாடிக்கையாளர்களின் இந்த கவனக்குறைவைப் பயன்படுத்தி மோசடிக்காரர்கள் சமூகப் பொறியியல் (Social Engineering) மூலம் தந்திரமாக மோசடி செய்கிறார்கள். அப்படிப்பட்ட ஒரு மோசடிதான் ‘ஜம்ப்டு டெபாசிட் ஸ்கேம்’ (Jumped Deposit Scam).
இந்த மோசடி எப்படி வேலை செய்கிறது மற்றும் இதிலிருந்து நீங்கள் எப்படிப் பாதுகாப்பாக இருக்கலாம் என்பதற்கான முழுமையான விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.
ஜம்ப்டு டெபாசிட் மோசடி என்றால் என்ன?
பணம் வருவதாக நம்ப வைத்து, மோசடிக்காரர்கள் தந்திரமாகப் பயனர்களை ஏமாற்றி UPI மூலம் ஒரு பேமெண்ட் ரிக்வெஸ்ட்டிற்கு (payment request) ஒப்புதல் அளிக்க வைப்பது ‘ஜம்ப்டு டெபாசிட் மோசடி’ எனப்படுகிறது. மோசடி நடந்தவுடன் அந்தப் பணம் நிமிஷங்களில் டஜன் கணக்கான வெவ்வேறு வங்கிக் கணக்குகளுக்கு மாற்றப்படுகிறது. பணம் எங்கு சென்றது என்பதைக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு இது மிக வேகமாக நடக்கும். இப்படிப் பணம் மிக வேகமாக மாறுவதால்தான் இதை ‘ஜம்ப்டு டெபாசிட்’ என்று அழைக்கிறார்கள்.
உங்களின் OTP-யைத் திருட முயற்சிக்கும் மற்ற மோசடிகளைப் போலன்றி, இந்த மோசடியில் தந்திரமாக உங்களையே உங்களின் UPI PIN-ஐ உள்ளிடச் செய்கிறார்கள்.
இந்த வலை எப்படி விரிக்கப்படுகிறது?
- சிறிய தொகை வரவு: முதலில் உங்கள் வங்கிக் கணக்கிற்கு ₹10 அல்லது ₹50 போன்ற மிகச் சிறிய தொகை வந்ததாக உங்களுக்கு ஒரு நோட்டிஃபிகேஷன் அல்லது SMS வரும்.
- பதட்டமான அழைப்பு: சில நிமிடங்களுக்குப் பிறகு, உங்களுக்கு ஒரு கால் வரும். போனில் பேசுபவர் மிகவும் பதட்டமாகவோ அல்லது அழுவது போலவோ பேசுவார். உங்கள் நம்பருக்குத் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டதாகவும், ஒரு மருத்துவ அவசரச் செலவுக்காகவோ அல்லது பில் கட்டுவதற்காகவோ அந்தப் பணம் உடனடியாகத் திரும்பத் தேவைப்படுவதாகவும் கெஞ்சுவார்.
- கவனச்சிதறல்: உங்களிடம் பேசிக்கொண்டிருக்கும்போதே, உங்கள் ஆப் அல்லது SMS-ஐத் திறந்து, உங்க கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டுள்ளதா என்று சரிபார்க்கவும் என அவர்கள் கூறுவார்கள். மோசடி செய்பவர் உங்களை நம்பவைக்க என்ன கதையைச் சொல்கிறாரோ, அதற்கேற்ப அந்த மெசேஜ் “Refund from XYZ Bank”, “Cashback from ABC Store” அல்லது “Deposit from Company Payroll” என்று வந்திருக்கும்
- ஒப்புதல் அளித்தல்: பின்னர், மோசடி செய்பவர் ஒரு பெரிய தொகைக்கான (உதாரணமாக ₹5,000) போலி QR கோடு அல்லது லிங்க்கை அனுப்புவார். இது நீங்கள் கடைகளிலோ அல்லது ஆன்லைனிலோ பணம் செலுத்தும்போது பார்ப்பது போலவே இருக்கும். உதவி செய்யும் அவசரத்தில், அந்த டெபாசிட்டை சரிபார்க்கிறோம் என்றோ அல்லது தவறுதலாக வந்த அந்த ₹50-ஐத் திருப்பிக் கொடுக்கிறோம் என்றோ நினைத்துக்கொண்டு நீங்கள் உங்களின் PIN-ஐ உள்ளிடலாம். ஆனால், நீங்கள் PIN-ஐ உள்ளிட்ட மறுகணமே, உங்கள் கணக்கிலிருந்து ஒரு பெரிய தொகை கழிக்கப்பட்டுவிடும்.
இந்த மோசடிக்குப் பின்னால் உள்ள உளவியல்
மனிதர்களின் பகுத்தறியும் திறனை முடக்கி, நமது அடிப்படையான உளவியல் காரணிகளைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்துவதால்தான் இந்த மோசடிகள் மிகவும் வெற்றிகரமாக நடப்பதாக நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்:
- நம்பிக்கையை உருவாக்குதல்: முதலில் ஒரு சிறிய தொகையை உண்மையாகவே அனுப்பி, தாங்கள் சொல்வது உண்மைதான் என்று உங்களை நம்பவைக்க மோசடிக்காரர்கள் முயற்சிக்கிறார்கள்.
- ஆர்வத்தையும் நம்பிக்கையையும் தவறாகப் பயன்படுத்துதல்: ஆர்வம், நம்பிக்கை மற்றும் டிஜிட்டல் பேமெண்ட்கள் குறித்த விழிப்புணர்வு இல்லாமை ஆகியவற்றைச் சாதகமாகப் பயன்படுத்தி இந்த மோசடி செயல்படுகிறது. எதிர்பாராமல் பணம் வரும்போது அதைச் சரிபார்க்கும் ஆர்வத்தையும், தவறுதலாக வந்த பணத்தைத் திருப்பிக் கொடுக்க வேண்டும் என்ற நமது நல்லெண்ணத்தையும் இவர்கள் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
- அவசரத்தை உருவாக்குதல்: உடனடியாகச் செயல்பட வைக்க உணர்வுபூர்வமான தந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன. பயனர்கள் யோசிக்கக் கூட நேரம் கொடுக்காமல் உடனடியாகச் செயல்படும் வகையில், மோசடிக்காரர்கள் நம்பும்படியான ஒரு பொய்க் கதையைக் கூறி (எ.கா., மருத்துவ அவசரம்) பதட்டத்தை ஏற்படுத்துகிறார்கள்.
- விழிப்புணர்வு இல்லாமை: பணம் பெறுவதற்கோ அல்லது பேலன்ஸைச் சரிபார்க்கவோ UPI PIN தேவையில்லை என்ற விஷயம் பலருக்கும் தெரிவதில்லை. பணத்தை அனுப்ப மட்டுமே PIN தேவை என்பதைப் பலரும் மறந்துவிடுகின்றனர்.
ஜம்ப்டு டெபாசிட் மோசடிகளில் இருந்து உங்கள் பணத்தை எப்படிக் பாதுகாப்பது?
- கொஞ்சம் பொறுத்திருங்கள்: உங்களுக்குத் திடீரென ஒரு டெபாசிட் வந்து, பின்னர் ஒரு பதட்டமான அழைப்பு வந்தால், அவசரப்பட வேண்டாம். மோசடியான பேமெண்ட் லிங்க்குகள் பெரும்பாலும் 5-10 நிமிடங்களில் காலாவதியாகிவிடும். எனவே, ஆப்-ஐத் திறப்பதற்கு முன் ஒரு 15 நிமிடங்கள் காத்திருந்தாலே இந்த ஆபத்தைத் தவிர்க்கலாம்.
- பரிவர்த்தனை விவரங்களைச் சரிபார்க்கவும்: உங்களால் அப்படி காத்திருக்க முடியவில்லை என்றால், பரிவர்த்தனை விவரங்களை (தொகை மற்றும் பணம் பெறுநரின் விவரங்கள்) முழுமையாகச் சரிபார்க்கவும். எந்தவொரு UPI ரிக்வெஸ்ட்டையும் ஏற்கும்முன் விவரங்களைக் கவனமாகப் படிப்பது முக்கியம். உங்கள் கணக்கில் பணம் வரவு வைக்கப்படுவதற்கு எந்தவொரு ஒப்புதலும் தேவையில்லை என்பதை நினைவில் கொள்ளவும்.
- வங்கிக்குச் செல்ல அறிவுறுத்துங்கள்: யாராவது உண்மையிலேயே உங்களுக்குத் தவறுதலாகப் பணத்தை அனுப்பியிருந்தால், அவர்களின் வங்கியைத் தொடர்புகொள்ளச் சொல்லுங்கள். இதுதான் அதிகாரப்பூர்வமான, பாதுகாப்பான வழியாகும். முன்பின் தெரியாத ஒருவரின் UPI ரிக்வெஸ்ட் மூலம் பணத்தைத் திருப்பி அனுப்ப வேண்டிய கட்டாயம் உங்களுக்கு இல்லை.
- உங்கள் திரையைச் சரிபார்க்கவும்: PIN உள்ளிடும் ஸ்கிரீனின் மேலே எப்போதும் “Paying” அல்லது “Sending to” (பணம் செலுத்தப்படுகிறது) என்ற வார்த்தைகள் உள்ளதா என்று பார்க்கவும். அந்த வார்த்தைகளை நீங்கள் பார்த்தால், உடனடியாகப் பரிவர்த்தனையை நிறுத்திவிடுங்கள்.
- அங்கீகரிக்கப்பட்ட UPI ஆப்ஸைப் பயன்படுத்துங்கள்: பல அடுக்கு பாதுகாப்பை (multi-layer security) வழங்கும் PhonePe போன்ற புகழ்பெற்ற தளங்கள் அல்லது வங்கிகளின் அதிகாரப்பூர்வ UPI ஆப்ஸை மட்டுமே பயன்படுத்துவதை உறுதிசெய்யவும்.
- பேமெண்ட் நோட்டிஃபிகேஷன்களை ஆன் செய்து வைக்கவும்: உங்கள் கணக்கில் நடக்கும் அங்கீகரிக்கப்படாத பரிவர்த்தனைகளை உடனடியாகக் கண்டறிய, அனைத்து வங்கிப் பரிவர்த்தனைகளுக்கும் SMS மற்றும் மின்னஞ்சல் நோட்டிஃபிகேஷன்களை எப்போதும் ஆன் செய்து வைக்கவும்.
நீங்கள் நினைவில் கொள்ள வேண்டிய முக்கியமான விதி
பணத்தைப் பெறுவதற்கு உங்கள் UPI பின்னை உள்ளிட வேண்டிய அவசியமில்லை என்பதை எப்போதும் நினைவில் கொள்ளுங்கள். அது ரீஃபண்ட், கேஷ்பேக், கிஃப்ட் அல்லது “தவறுதலாக” வந்த பணம் என எதுவாக இருந்தாலும் சரி, ஒரு ஸ்கிரீன் உங்களிடம் PIN-ஐக் கேட்கிறது என்றால், உங்கள் கணக்கிலிருந்து பணம் வெளியேறப் போகிறது என்று அர்த்தம்.
நீங்கள் மோசடிக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்?d
நீங்கள் ஏதேனும் மோசடியில் சிக்கியதாகச் சந்தேகித்தால், சிறிதும் தாமதிக்காமல் உடனடியாகப் புகாரளிக்கவும். இதில் ஒவ்வொரு நொடியும் மிகவும் முக்கியம்!
PhonePe-வில் புகாரளிக்க:
- PhonePe ஆப்: உதவி பகுதிக்குச் சென்று புகாரை எழுப்பவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
- சோஷியல் மீடியா புகாரளித்தல்:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
அதிகாரிகளிடம் புகாரளித்தல்:
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.
முக்கிய நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
