
Trust & Safety
புதிய மோசடி ட்ரெண்ட் : அப்பாவி மக்களை ஏமாற்ற ராணுவ வீரர்கள் போல் நடிக்கும் மோசடி கும்பல்
PhonePe Regional|3 min read|29 July, 2026
அப்பாவி மக்களை ஏமாற்றுவதற்காக இந்திய ஆயுதப்படை ஊழியர்களைப் போல நடிக்கும் மோசடி செய்பவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்துள்ளதை எங்களது ‘டிரஸ்ட் & சேஃப்டி’ குழு கண்டறிந்துள்ளது. ராணுவத்தின் மீது மக்கள் வைத்திருக்கும் அசைக்க முடியாத மதிப்பையும், நம்பிக்கையையும் சாதகமாகப் பயன்படுத்தும் இந்த மோசடி கும்பல், கடுமையான மன அழுத்தச் சூழலை உருவாக்கி மக்களிடமிருந்து பணத்தைப் பறிக்கிறது. இந்த வகையான மோசடி இந்தியா முழுவதும் வேகமாகப் பரவி வருவதால், இந்த தந்திரம் எவ்வாறு செயல்படுகிறது என்பதைத் துல்லியமாகப் புரிந்துகொள்வது மிக அவசியமாகும்.
பொதுவான மோசடி முறை
இது எவ்வளவு விரைவாக நடக்கும் என்பதைப் பற்றிய ஒரு யோசனையை வழங்க, பொதுவான மோசடி முறையின் எளிய விளக்கம் கீழே உள்ள படத்தில் கொடுக்கப்பட்டுள்ளது. மோசடி செய்பவன் ஒருவன், ஆன்லைனில் ஃபர்னிச்சர் விற்பனை செய்ய விளம்பரம் கொடுத்த நபரைத் தொடர்புகொண்டு, அதை வாங்க ஆர்வமுள்ள ஒரு ராணுவ அதிகாரி போல் நடிக்கிறான். விற்பனையாளரை வற்புறுத்தவும், அவசரப்படுத்தவும் மற்றும் குழப்பவும் அவன் தனது போலி அடையாளத்தைப் பயன்படுத்துகிறான் – இறுதியில் பணத்தைப் பெறுவதற்குப் பதிலாக, விற்பனையாளரையே பணம் செலுத்த வைக்கும்படி ஏமாற்றுகிறான்.

இந்த சோஷியல் இன்ஜினியரிங் தாக்குதல் எவ்வாறு செயல்படுகிறது என்பதை இந்தப் பதிவு விளக்குவதுடன், உங்கள் பணத்தைப் பாதுகாப்பாக வைத்திருக்க PhonePe பயன்படுத்தும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்கள் குறித்தும் விரிவாக எடுத்துரைக்கிறது.
இந்த மோசடி எவ்வாறு செயல்படுகிறது?
இது ஒரு கிளாசிக் சோஷியல் இன்ஜினியரிங் அட்டாக் ஆகும். மோசடி செய்பவர்கள் வாய்ஸ் அல்லது வீடியோ அழைப்புகள் மூலம் எளிதில் ஏமாறக்கூடிய நபர்களைத் தொடர்புகொள்கிறார்கள். மக்கள் நிதானமாக யோசித்துச் செயல்படுவதற்குள் அவசரமாக முடிவுகளை எடுக்கும்படி செய்ய கடுமையான மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறார்கள். மேற்கண்ட சூழ்நிலையில் பார்த்தது போல, ராணுவ அதிகாரியை நம்பி, பணத்தைப் பெறும் நோக்கில் மக்கள் அறியாமலேயே தங்களது UPI PIN-ஐ உள்ளிடும்போது, சில நொடிகளிலேயே பணத்தை இழக்க நேரிடுகிறது.
ராணுவத்தினர் போல் நடித்து ஏமாற்றும் முறைகள்
1. தனிநபர்களை இலக்காகக் கொண்ட பேமெண்ட் ட்ராப்
- இலக்குகள்: ஆன்லைனில் பொருட்களை விற்பனை செய்பவர்கள், வீட்டை வாடகைக்கு விட விரும்பும் உரிமையாளர்கள், மருத்துவர்கள், உள்ளூர் ஆசிரியர்கள் மற்றும் பிற சேவை வழங்குநர்களை இந்த மோசடி கும்பல் குறிவைக்கிறது.
- சதி வலை: அவர்கள் தங்களை ஒரு ராணுவ அதிகாரி அல்லது ஜவான் (“கேப்டன் குமார்” போல) என்று அறிமுகப்படுத்திக் கொள்வார்கள். உங்களது பொருள் அல்லது சேவை அவர்களுக்கு அவசரமாகத் தேவைப்படுவதாகக் கூறுவார்கள். ஆனால், “ராணுவ முகாமின் கடுமையான விதிகள்” காரணமாக உங்களை நேரில் சந்திக்க முடியாது என்று சாக்குப்போக்கு சொல்வார்கள்.
- நம்பிக்கை மோசடி: உங்களை நம்ப வைப்பதற்காக போலி ராணுவ அடையாள அட்டை, ஆதார் மற்றும் அவர்களின் சில போலி புகைப்படங்களை உங்களுக்கு அனுப்புவார்கள். அதன் பிறகு, ஏதோ ஒரு “அரசு வணிகர் வாலட்” மூலமாக உங்களுக்கு அட்வான்ஸ் பணம் அனுப்புவது போல நாடகமாடுவார்கள்.
- ஏமாற்று வேலை: வரவிருக்கும் பணப் பரிமாற்றத்தை அங்கீகரிக்க” உங்களது UPI PIN-ஐ உள்ளிடுமாறு கூறி, அவர்கள் உங்களுக்கு ஒரு பேமெண்ட் கோரிக்கையையோ அல்லது QR குறியீட்டையோ அனுப்பி, உங்கள் UPI PIN-ஐ போடும்படி சொல்வார்கள். உண்மையில், உங்கள் UPI PIN-ஐ உள்ளிடுவது உங்கள் கணக்கிலிருந்து பணத்தை எடுப்பதற்கான அனுமதியை அளித்து, உங்கள் கணக்கை முழுமையாகக் காலி செய்துவிடும்.
2. வணிகங்களை இலக்காகக் கொண்ட அட்வான்ஸ் ட்ராப்
- இலக்குகள்: மொத்த வியாபாரிகள் மற்றும் சிறு-நடுத்தர வணிக நிறுவனங்கள்.
- தூண்டில்: ராணுவ அதிகாரி போல் நடிக்கும் இந்த மோசடி பேர்வழி, தங்களது ராணுவ முகாமிற்காக உங்களிடம் பெருமளவில் பொருட்களை வாங்கப்போவதாகக் கூறி ஆசை காட்டுவான்.
- ஏமாற்றும் விதம்: அதன் பிறகு, ராணுவத்தில் பொருட்கள் வாங்குவதற்கு கடுமையான விதிமுறைகள் இருப்பதாகக் கூறி உங்களை நம்ப வைப்பான். நீங்கள் அவர்களுக்குப் பொருட்களை விற்க வேண்டுமென்றால், முதலில் ஒரு “வணிகர் பதிவு கட்டணம்” அல்லது “பாதுகாப்பு வைப்புத்தொகை” செலுத்த வேண்டும் என்று கூறி உங்களை ஏமாற்றுவான்.
- பணப் பறிப்பு: அவர்கள் சொன்ன அந்தக் கட்டணத்தை வணிகர் செலுத்திய உடனே, அந்த மோசடி பேர்வழி பணத்தோடு தலைமறைவாகி விடுவான். அதன் பிறகு அவனைத் தொடர்புகொள்ள எந்த வழியும் இருக்காது.
PhonePe-வின் தானியங்கி பாதுகாப்பு அமைப்புகள்
இதுபோன்ற தந்திரமான மோசடிகளை முன்கூட்டியே தடுத்து நிறுத்த PhonePe வலுவான சைபர் பாதுகாப்பு அமைப்புகளைக் கொண்டுள்ளது. இதில் முக்கியமானது நிகழ்நேரத்தில் செயல்படும் PhonePe Protect ஆகும். இது மத்திய தொலைத்தொடர்புத் துறையுடன் (DoT) நேரடியாக இணைக்கப்பட்ட, PhonePe-வின் சொந்த AI (செயற்கை நுண்ணறிவு) பாதுகாப்பு அமைப்பாகும். இது பணம் பெறுபவரின் போன் நம்பரை, ஏற்கனவே மோசடி என்று புகாரளிக்கப்பட்ட எண்களின் தேசிய தரவுத்தளத்துடன் உடனுக்குடன் ஒப்பிட்டுச் சரிபார்க்கிறது. இது செயல்படும் விதம்:
- உடனடி முடக்கம் : PhonePe Protect அமைப்பு ஏதேனும் ஒரு போன் நம்பரை ‘அபாயகரமானது’ என்று கண்டறிந்தால், PhonePe உடனடியாக அந்தப் பணப் பரிவர்த்தனையை பிளாக் செய்து நிராகரித்துவிடும்.
- முன்னெச்சரிக்கை தடைகள் : ஒரு பணப் பரிவர்த்தனை சந்தேகத்திற்குரியதாக இருந்தால், PhonePe வேண்டுமென்றே அதைச் சிறிது நேரம் நிறுத்தி வைக்கும். மேலும், திரையில் ஒரு பாதுகாப்பு எச்சரிக்கையைக் காண்பிக்கும். நீங்கள் யாரோ ஒருவரின் ஃபோன் அழைப்பை நம்பி ஏமாறவில்லை என்பதை உறுதிப்படுத்திய பிறகே, உங்கள் PIN-ஐ உள்ளிட அது அனுமதிக்கும். அது இந்த வடிவத்தில் இருக்கும்:

புகார் அளிப்பது எப்படி
நீங்கள் ஒரு மோசடிக்கு இலக்காகியிருப்பதாகச் சந்தேகித்தால், உடனடியாகப் புகாரளிக்கவும்.
PhonePe-வில் புகாரளிக்க:
- PhonePe குரூப் சாட்: அந்த குரூப் ஒரு மோசடி குழுவாக இருக்கலாம் என்று நீங்கள் சந்தேகித்தால், குரூப் ப்ரொஃபைல் பக்கத்திற்குச் சென்று வெளியேறு மற்றும் புகார் செய் ஆப்ஷன்களை கிளிக் செய்யலாம்.
- PhonePe ஆப்: உதவி பகுதிக்குச் சென்று புகாரை எழுப்பவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
- சோஷியல் மீடியா புகாரளித்தல்:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
அதிகாரிகளிடம் புகாரளித்தல்:
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.
முக்கிய நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
