
Trust & Safety
ஆன்லைன் ஷாப்பிங் பாதுகாப்பு: போலி இணையதளங்கள் & மோசடி விளம்பரங்களைத் தவிர்ப்பது எப்படி?
PhonePe Regional|3 min read|18 September, 2025
ஆன்லைன் ஷாப்பிங் இன்று ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதத்தில் பயன்படுகிறது. சிலருக்கு இது மனஅழுத்தத்தைக் குறைக்கும் ஒரு ‘தெரபி’ என்றால், பிஸியாக வேலை செய்பவர்களுக்குக் கடைக்கு அலையாமல் ஷாப்பிங் செய்ய இது ஒரு சிறந்த மாற்று. பள்ளி விழாவுக்குத் தேவையான பொருட்களை வாங்கத் திணறும் ஒரு தாய்க்கு இது ஒரு வரம். கடைசி நேரத்தில் நண்பர்களுக்குப் பரிசு வாங்கவும் இது உதவுகிறது. இப்படி இதன் பயன்களை அடுக்கிக்கொண்டே போகலாம். உண்மையில், நமக்காகவும் நமது அன்பானவர்களுக்காகவும் நாம் பொருட்கள் வாங்கும் விதத்தையே ஆன்லைன் ஷாப்பிங் முற்றிலுமாக மாற்றிவிட்டது. ஆனால், துரதிர்ஷ்டவசமாக, இந்த மிகப் பெரிய வசதிக்கு ஒரு இருண்ட பக்கமும் உண்டு. அதுதான் ஆன்லைன் ஷாப்பிங் மோசடி.
சைபர் குற்றவாளிகள், போலியான ஆன்லைன் ஸ்டோர்களை உருவாக்கி, சமூக ஊடக விளம்பரங்களைப் பயன்படுத்தி மக்களை ஏமாற்றுகிறார்கள். இதன் மூலம், மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடுகிறார்கள் அல்லது இல்லாத பொருட்களுக்குப் பணம் செலுத்த வைக்கிறார்கள். இந்த மோசடிகள் பார்ப்பதற்கு மிகவும் நம்பும்படியாக இருப்பதால், அவற்றை முதல் பார்வையிலேயே கண்டறிவது கடினம்.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடி என்பது வெறும் நூறு அல்லது ஆயிரம் ரூபாயை இழப்பது மட்டுமல்ல, அது நீண்ட கால பாதிப்புகளையும் ஏற்படுத்தக்கூடியது:
- பண இழப்பு: ஒருமுறை பணம் அனுப்பப்பட்டுவிட்டால், அதைத் திரும்பப் பெறுவது கிட்டத்தட்ட சாத்தியமற்றது.
- தகவல் திருட்டு: மோசடி இணையதளங்கள் உங்கள் கிரெடிட் கார்டு தகவல் உள்ளிட்ட தனிப்பட்ட விவரங்களைத் தவறாகப் பயன்படுத்தக்கூடும்.
- பிராண்டின் மீதான நம்பிக்கை குறைதல்: பாதிக்கப்பட்டவர்கள், உண்மையான பரிவர்த்தனைகளுக்குக் கூட, அதே பிராண்ட் அல்லது பேமண்ட் கேட்வேயைப் பயன்படுத்தத் தயங்குவார்கள்.
மோசடி செய்பவர்கள், மக்களின் நம்பிக்கை, அவசரத் தேவை மற்றும் நல்ல சலுகைகள் மீதான ஆசை ஆகியவற்றைத் தங்களுக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். வாருங்கள், இந்த மோசடிகள் எப்படிச் செயல்படுகின்றன, அவற்றிலிருந்து உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது என்று விரிவாகப் பார்ப்போம்.
ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகள் எப்படிச் செயல்படுகின்றன?
1. சமூக ஊடகங்களில் போலி கணக்குகள்
மோசடி செய்பவர்கள் சமூக ஊடகங்களில் போலிப் பக்கங்களை உருவாக்குகிறார்கள். அவர்கள் வழக்கமாக:
- புகழ்பெற்ற விற்பனையாளர்கள் அல்லது பிராண்டுகள் போல தங்களைக் காட்டிக்கொள்வார்கள்.
- “நம்பவே முடியாத” அளவுக்குச் சிறப்புத் தள்ளுபடிகளை வழங்குவார்கள்.
- திருடப்பட்ட பொருட்களின் படங்கள் மற்றும் போலி வாடிக்கையாளர் கருத்துகளைப் பயன்படுத்துவார்கள்.
- UPI அல்லது வங்கிப் பரிமாற்றம் மூலம் முன்பணம் செலுத்தும்படி வற்புறுத்திவிட்டு, பணம் பெற்றவுடன் மறைந்துவிடுவார்கள்.
உதாரணமாக, ஒரு போலி சமூக ஊடகப் பக்கம், பிரபலமான பிராண்டுகளின் டிரெண்டிங் ஆடைகளை பாதி விலையில் விற்பனை செய்வதாகக் காட்டும். பணம் செலுத்தியவுடன், அந்தப் பக்கம் உங்களை பிளாக் செய்துவிடும் அல்லது ஒரே இரவில் காணாமல் போய்விடும்.
2. போலியான ஆன்லைன் இணையதளங்கள்
போலி இணையதளங்கள் பெரும்பாலும் உண்மையான இ-காமர்ஸ் தளங்களைப் போலவே வடிவமைக்கப்பட்டிருக்கும். அவை:
- உண்மையான தளங்களைப் போன்றே டொமைன் பெயர்களைப் பயன்படுத்தும் (எ.கா: xyz.in என்பதற்குப் பதிலாக xYz.in).
- வாடிக்கையாளர்களைக் கவர நம்ப முடியாத மலிவான சலுகைகளை வழங்கும்.
- பாதுகாப்பற்ற பேமண்ட் கேட்வேக்கள் மூலம் உங்கள் வங்கி விவரங்களுக்கு ஆபத்தை உண்டாக்கும்.
- போலியான பொருட்களை டெலிவரி செய்யும், அல்லது எந்தப் பொருளையும் அனுப்பாமலும் இருக்கலாம்.
இணையதளத்தின் நம்பகத்தன்மை, ரிட்டர்ன் பாலிசிகள் அல்லது தொடர்புத் தகவல்கள் போன்ற விவரங்களை வாங்குபவர்கள் சரிபார்க்க மாட்டார்கள் என்ற நம்பிக்கையில்தான் இந்த இணையதளங்கள் செயல்படுகின்றன.
கவனிக்க வேண்டிய எச்சரிக்கை அறிகுறிகள்
பொதுவான எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி விழிப்புடன் இருப்பது, ஆன்லைன் ஷாப்பிங் மோசடிகளில் இருந்து உங்களைக் காப்பாற்றும். சில முக்கிய அறிகுறிகள்:
- நம்ப முடியாத தள்ளுபடிகள்: ஒரு சலுகை உண்மையிலேயே நம்ப முடியாத அளவுக்கு இருந்தால், அது பெரும்பாலும் பொய்யாகவே இருக்கும்.
- கேஷ் ஆன் டெலிவரி (COD) வசதி இல்லாதது: மோசடியாளர்கள் பெரும்பாலும் முன்பணம் மட்டுமே செலுத்தும்படி வற்புறுத்துவார்கள்.
- சந்தேகத்திற்கிடமான இணையதள வடிவமைப்பு: மோசமான இலக்கணம், மங்கலான படங்கள் அல்லது செயல்படாத இணைப்புகள் ஆகியவை முக்கிய அறிகுறிகளாகும்.
- சரிபார்க்கப்படாத சமூக ஊடகப் பக்கங்கள்: பக்கத்தில் ப்ளூ டிக் உள்ளதா அல்லது உண்மையான ஃபாலோயர்களின் எண்ணிக்கையைச் சரிபார்க்கவும்.
- வாடிக்கையாளர் சேவை இல்லாமை: முறையான நிறுவனங்கள் தெளிவான ரிட்டர்ன்/எக்ஸ்சேஞ்ச் பாலிசிகள் மற்றும் பதிலளிக்கக்கூடிய வாடிக்கையாளர் சேவையை வழங்கும்.
உங்களை எப்படிப் பாதுகாத்துக் கொள்வது?
மோசடி செய்பவர்கள் நாளுக்கு நாள் புத்திசாலிகளாக மாறினாலும், உங்களைப் பாதுகாத்துக்கொள்ள பல வழிகள் உள்ளன:
- வாங்குவதற்கு முன் சரிபார்க்கவும்: விற்பனையாளர் அல்லது இணையதளத்தைப் பற்றி எப்போதும் ஆய்வு செய்யுங்கள். ஒரு விரைவான கூகுள் தேடல் மூலம் மதிப்புரைகளைப் படித்தால், மோசடிகளை எளிதில் கண்டறியலாம்.
- இணையதளத்தின் பாதுகாப்பைச் சரிபார்க்கவும்: பேமண்ட் விவரங்களை உள்ளிடும் முன், இணையதள முகவரியில் (URL) https:// மற்றும் ஒரு பூட்டுச் சின்னம் (padlock symbol) உள்ளதா எனப் பார்க்கவும்.
- நம்பகமான தளங்களைப் பயன்படுத்தவும்: நன்கு அறியப்பட்ட மற்றும் நல்ல பெயரைப் பெற்ற இ-காமர்ஸ் செயலிகள் மற்றும் இணையதளங்களை மட்டுமே பயன்படுத்தவும்.
- சமூக ஊடகங்களில் எச்சரிக்கையாக இருங்கள்: சமூக ஊடகங்களில் நீங்கள் பார்க்கும் ஒவ்வொரு பக்கத்தையும் அல்லது விளம்பரத்தையும் நம்ப வேண்டாம். கணக்கின் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தவும்.
- சந்தேகத்திற்கிடமான செயல்பாடுகளைப் புகாரளிக்கவும்: போலிப் பக்கங்களை அந்தந்த தளங்களில் புகாரளிக்கவும், மேலும் அரசாங்கத்தின் சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
நினைவில் கொள்ளுங்கள், உண்மையான வணிகங்கள் வெளிப்படைத்தன்மைக்கு மதிப்பளிக்கும், பாதுகாப்பான கட்டண விருப்பங்களை வழங்கும், மேலும் விரைவாகப் பணம் செலுத்தும்படி உங்களை ஒருபோதும் வற்புறுத்தாது.
அடுத்த முறை நீங்கள் சமூக ஊடகங்களில் நம்ப முடியாத சலுகையைப் பார்க்கும்போது அல்லது நீங்கள் கேள்விப்படாத ஒரு இணையதளத்தைப் பார்க்கும்போது, “Buy Now/இப்போது வாங்கவும்” பட்டனை அழுத்துவதற்கு முன்—சற்று நிறுத்துங்கள், சரிபாருங்கள், இருமுறை சிந்தியுங்கள்.
PhonePe-இல் ஒரு மோசடியைப் பற்றிப் புகாரளிப்பது எப்படி?
PhonePe மூலம் நீங்கள் ஏமாற்றப்பட்டிருந்தால், இதோ புகார் அளிப்பதற்கான வழிகள்:
1. PhonePe ஆப்: ஆப் Help/உதவி பகுதிக்குச் சென்று, “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது” (have an issue with the transaction) என்ற விருப்பத்தின் கீழ் புகாரைப் பதிவு செய்யவும்.
2. PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: நீங்கள் PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374 / 022–68727374 என்ற எண்களில் அழைத்து உங்கள் சிக்கலைக் கூறலாம். அதன் பிறகு, வாடிக்கையாளர் சேவை அதிகாரி ஒரு டிக்கெட்டைப் பதிவுசெய்து, உங்கள் பிரச்சனைக்கு உதவுவார்.
3. சமூக ஊடகம்: நீங்கள் மோசடி குறித்துப் புகாரளிக்கலாம்:
Twitter — https://twitter.com/PhonePeSupport
Facebook — https://www.facebook.com/OfficialPhonePe
4.குறைதீர்ப்பு: ஏற்கனவே உள்ள புகாரின் மீது மேல்முறையீடு செய்ய, https://grievance.phonepe.com/ தளத்தில் உள்நுழைந்து, முன்பு வழங்கப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரவும்.
5. சைபர் செல்: இறுதியாக, நீங்கள் அருகிலுள்ள சைபர் கிரைம் பிரிவில் மோசடி புகார்களை அளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைனில் புகார் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி எண்ணைத் தொடர்பு கொள்ளலாம்.
முக்கியமான நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் உங்களிடம் ரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. phonepe.com என்ற டொமைனில் இருந்து வராத, PhonePe-இலிருந்து வருவதாகக் கூறும் அனைத்து மின்னஞ்சல்களையும் புறக்கணிக்கவும். மோசடி எனச் சந்தேகம் ஏற்பட்டால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.