
Trust & Safety
செயற்கை அடையாள மோசடி: போலி அடையாளங்கள் உருவாக்கப்படும் பின்னணி
PhonePe Regional|3 min read|26 May, 2026
உங்களது கிரெடிட் கார்டுகளில் முழுத் தொகையும் பயன்படுத்தப்பட்டுவிட்டது என்றும், உங்களது பில்கள் செலுத்தப்படாமல் நிலுவையில் உள்ளன என்றும் பல வங்கிகளில் இருந்து உங்களுக்குத் தொலைபேசி அழைப்புகள் வருவதாகக் கற்பனை செய்து பாருங்கள். இந்த மாதத்தில் உங்களது கார்டு லிமிட்டை நீங்கள் இன்னும் எட்டவில்லை என்பது உங்களுக்குத் தெளிவாகத் தெரியும், அதை நீங்கள் வங்கிகளிடமும் தெரிவிக்கிறீர்கள். தொடர்ந்து பல அழைப்புகள் வந்ததும், நீங்கள் கூடுதல் விவரங்களைக் கேட்கிறீர்கள்; அப்போதுதான் உங்களது ஃபோன் நம்பரும் PAN-உம் வேறொரு நபரின் அடையாளத்துடன் இணைக்கப்பட்டு, ஒரு போலி நபர் உருவாக்கப்பட்டுள்ளார் என்பதும், அதன் மூலம் அங்கீகரிக்கப்படாத பணப்பரிவர்த்தனைகள் செய்யப்பட்டுள்ளன என்பதும் உங்களுக்குத் தெரியவருகிறது. இதுவே “செயற்கை அடையாள மோசடி” ஆகும்.
உங்களது அடையாளம் என்பது உங்களுடைய மிக முக்கியமான சொத்தாகும். நீங்கள் வாக்களிக்கவும், வாகனங்களை ஓட்டவும், பணப்பரிவர்த்தனைகள் செய்யவும், பயணம் செய்யவும், வரிகள் செலுத்தவும் மற்றும் நீங்கள் நீங்களாக இருக்கவும் அதுவே திறவுகோலாகும். எனவே, உங்களது மற்ற விலையுயர்ந்த பொருட்களை எவ்வாறு பாதுகாப்பீர்களோ, அதேபோல உங்களது வாழ்வின் இந்த முக்கிய அம்சத்தையும் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும்.
மோசடி செய்பவர்கள் உங்களது கஷ்டப்பட்டு சம்பாதித்த பணத்தைத் திருட உங்களது அடையாளத்தை எவ்வாறு தவறாகப் பயன்படுத்துகிறார்கள் என்ற ஒரு குறிப்பிட்ட வகை மோசடியைப் பற்றி இந்த வலைப்பதிவு விரிவாக விளக்குகிறது.
செயற்கை அடையாள மோசடி என்றால் என்ன?
பொதுவான அடையாளத் திருட்டில், ஒரு மோசடிக்காரர் உங்களது அடையாளத்தைத் திருடி உங்களைப் போல நடிக்கிறார். ஆனால், செயற்கை அடையாள மோசடி என்பது மிகவும் அதிநவீனமான ஒரு செயல்பாடாகும். இதில் குற்றவாளிகள் உண்மையான மற்றும் போலி விவரங்களை ஒன்றாக இணைத்து, முற்றிலும் புதிய, கற்பனையான ஒரு நபரை உருவாக்குகிறார்கள்.
மோசடி செய்பவர்கள், உண்மையான அடையாள விவரங்களான ஆதார் அல்லது PAN போன்றவற்றை, ஏதேனும் கற்பனையான அல்லது தொடர்பில்லாத பெயர்கள் மற்றும் தவறான அல்லது காலியாக உள்ள முகவரிகளுடன் இணைக்கிறார்கள். இதன் இறுதி முடிவு என்னவென்றால், நிஜ உலகில் இல்லாத ஒரு முழுமையான அடையாளம் உருவாக்கப்படுகிறது. ஆனால், அது ஒரு உண்மையான வாடிக்கையாளர் என்று நிதி நிறுவனங்களின் அமைப்புகளை நம்ப வைக்கிறது.
செயற்கை அடையாள மோசடி எவ்வாறு செயல்படுகிறது?
ஒரு மோசடிக்காரர் கற்பனையான அடையாளத்தை உருவாக்கியதும், அதை உடனடியாகப் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, அதைச் சுற்றிலும் ஒரு நம்பகத்தன்மையை உருவாக்க அவர்கள் கணிசமான நேரத்தைச் செலவிடுகிறார்கள். அவர்கள் அதைச் செய்யும் விதம் இதோ:
- அவர்கள் திருடப்பட்ட PAN அல்லது ஆதார் எண்ணைக் கொண்டு இதைத் தொடங்குகிறார்கள். பெரும்பாலும் மூத்த குடிமக்கள் போன்ற தங்களது கிரெடிட் விவரங்களைத் தொடர்ந்து கண்காணிக்காத நபர்களையே இதற்கு அவர்கள் குறிவைக்கிறார்கள்.
- அவர்கள் சிறிய அளவிலான கிரெடிட் லைன்கள் அல்லது ஸ்டோர் கார்டுகளுக்கு விண்ணப்பிக்கிறார்கள். இந்த விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டாலும் கூட, நிதி நிறுவனங்களின் அமைப்பில் அந்தப் போலி நபருக்கான ஒரு கிரெடிட் ப்ரொஃபைல் உருவாக இது வழிவகுத்துவிடுகிறது.
- தங்களது கிரெடிட் ஸ்கோரை அதிகரிப்பதற்காக, அவர்கள் சிறிய பில்களைச் சரியான நேரத்தில் செலுத்துகிறார்கள். நம்பகத்தன்மையை மேலும் அதிகரிக்க, பிற நல்ல கணக்குகளில் தங்களது விவரங்களை இணைக் கணக்குதாரராகவோ அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயனராகவோ கூட சேர்த்துக் கொள்கிறார்கள்.
- கிரெடிட் லிமிட் அவர்கள் விரும்பிய அளவை எட்டியதும், மோசடி செய்பவர் ஒவ்வொரு கணக்கிலும் உள்ள முழுத் தொகையையும் பயன்படுத்திவிட்டு மறைந்துவிடுகிறார்
பரிவர்த்தனைகளைச் செய்யும் “நபர்” நிஜத்தில் இல்லாததால், வங்கிகள் இல்லாத ஒரு நிழலைத் தான் துரத்த வேண்டியிருக்கும்.
ஆனால், இந்த மோசடியின் உண்மையான பாதிப்பு, யாருடைய அடையாளங்கள் திருடப்பட்டதோ அந்தப் அப்பாவி மனிதர்களையே சேருகிறது. உங்களது அடையாள ஆவணம் ஒரு செயற்கை அடையாள மோசடிக்கு ஆதாரமாகப் பயன்படுத்தப்பட்டிருந்தால், பல வருடங்களுக்கு உங்களுக்கு அது தெரிய வாய்ப்பே இல்லை! எப்போதாவது நீங்கள் ஒரு கார் லோனுக்கோ அல்லது கல்வி லோனுக்கோ விண்ணப்பிக்கும்போது, உங்களது PAN எண் ஒரு மிகப்பெரிய ‘போலி கடனுடன்’ பிணைக்கப்பட்டுள்ளதாகக் கூறி உங்களது விண்ணப்பம் நிராகரிக்கப்படும். அந்த இடி போன்ற அதிர்ச்சியான தருணத்தில்தான், நீங்கள் எப்போதோ ஒரு பெரும் மோசடி வலையில் சிக்க வைக்கப்பட்டுள்ளீர்கள் என்பதே உங்களுக்குத் தெரியவரும்.
PhonePe உங்களை எவ்வாறு பாதுகாக்கிறது
இத்தகைய அதிநவீன மோசடிகளைக் கண்டறிந்து தடுக்க, PhonePe மனித ஆற்றல் மற்றும் செயற்கை நுண்ணறிவு (AI) ஆகிய இரண்டின் கூட்டுத் தொழில்நுட்பத்தையும் பயன்படுத்துகிறது. செயற்கை முறையில் உருவாக்கப்படும் போலி அடையாளங்கள் பொதுவாக, மீண்டும் மீண்டும் வரும் குறிப்பிட்ட சில வடிவங்கள் மற்றும் அமைப்புகளுடன், மனிதர்களைப் போலன்றி இயந்திரங்களைப் போலவே நடந்துகொள்ளும். PhonePe அமைப்புகளால் இத்தகைய செயல்பாடுகளை மிக எளிதாகக் கண்டறிந்துவிட முடியும். நிஜ உலக யூசர்கள் எப்போதுமே தங்களது நண்பர்கள், குடும்பத்தினர் மற்றும் மெர்ச்சன்ட்களுடன் ஏதோ ஒரு வகையில் இணைக்கப்பட்டிருப்பார்கள். ஆனால், நிஜ உலகத் தொடர்புகள் எதுவுமே இல்லாத ஒரு புதிய கணக்கை எங்கள் சிஸ்டம் காணும்போது, அது தானாகவே எங்களுக்கான ஒரு எச்சரிக்கை அறிகுறியாக மாறுகிறது; உடனே அந்தக் கணக்கு முடக்கப்படும். மேலும், எங்களது KYC சரிபார்ப்பு அமைப்பு உங்களது அடையாள ஆவணங்களை வெறும் மேலோட்டமாகப் பார்ப்பதுடன் நின்றுவிடுவதில்லை. ஆவணத்தில் உள்ள ஒரு சிறிய எண்ணோ அல்லது புகைப்படமோ டிஜிட்டல் முறையில் எடிட் செய்யப்பட்டு, ஒரு போலி அடையாளம் உருவாக்கப்பட்டுள்ளதா என்பதைக் கண்டறிய, அதில் செய்யப்பட்டுள்ள மிக நுட்பமான மாற்றங்கள் மற்றும் திருத்தங்கள் அனைத்தையும் எங்கள் சிஸ்டம் துல்லியமாக ஆராய்ந்து சரிபார்க்கிறது.
உங்களை எவ்வாறு பாதுகாப்பாக வைத்திருப்பது:
நீங்களும் உங்களது குடும்பத்தினரும் இந்தச் செயற்கை அடையாள மோசடி வலையில் சிக்காமல் இருக்க சில எளிய மற்றும் முக்கியமான வழிகள் இதோ:
- உங்களது கிரெடிட் ஸ்கோரைச் கண்காணிக்கவும்: உங்களது கிரெடிட் ஸ்கோரைத் தொடர்ந்து சரிபார்க்கும் வழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். உங்களுக்குத் தெரியாத ஒரு லோனோ அல்லது லோன் தேவைக் குறித்த விசாரணையோ உங்களது கணக்கில் காட்டினால், அது உங்களது ஐடி வேறு யாரோ ஒருவரால் பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான முக்கிய எச்சரிக்கை அறிகுறியாகும்.
- அடையாள ஆவணங்களைப் பாதுகாக்கவும்: உங்களுடைய ஆதார் மற்றும் PAN கார்டுகளை மிகவும் கவனமாகக் கையாளுங்கள். சரிபார்க்கப்படாத அல்லது அறிமுகமில்லாத சமூக ஊடகக் குழுக்களில் உங்களுடைய அடையாள ஆவணங்களின் புகைப்படங்களை ஒருபோதும் பகிர வேண்டாம்.
- பயோமெட்ரிக் லாக்குகளை ஆன் செய்யவும்: உங்களது PhonePe செட்டிங்ஸிற்குச் சென்று ஃபிங்கர்பிரிண்ட் அல்லது ஃபேஸ் ஐடி இயக்கப்பட்டுள்ளதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். இது உங்களுடைய கணக்கிற்கு மிக முக்கியமான கூடுதல் பாதுகாப்பை வழங்குகிறது
நீங்கள் மோசடியால் பாதிக்கப்பட்டால் என்ன செய்ய வேண்டும்
நீங்கள் ஏதேனும் ஒரு மோசடி வலையில் குறிவைக்கப்பட்டு இருப்பதாகச் சிறிதளவு சந்தேகம் எழுந்தாலும், அதனை உடனடியாகப் புகாரளியுங்கள். ஏனெனில், இத்தகைய சூழலில் உங்களுடைய ஒவ்வொரு நொடியும் மிக முக்கியமானது!
PhonePe-வில் புகாரளிக்க:
- PhonePe ஆப்: உதவி பகுதிக்குச் சென்று புகாரை எழுப்பவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 80–68727374 அல்லது 022–68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
- சோஷியல் மீடியா புகாரளித்தல்:
- Twitter: PhonePe Support
- Facebook: PhonePe Official
- குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.
அதிகாரிகளிடம் புகாரளிக்க:
- சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
- தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.
முக்கிய நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.
