PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

கேஷ் ஆன் டெலிவரி (COD) மோசடி: விழிப்புடன் இருப்பது மற்றும் பாதுகாப்பாக ஷாப்பிங் செய்வது எப்படி?

momitajaiswal3|4 min read|17 November, 2026

URL copied to clipboard

கொரோனா காலத்திற்குப் பிறகு ஆன்லைன் ஷாப்பிங்கில் மிகப்பெரிய வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இது நேர்மையான வணிகங்களின் பெருக்கத்திற்கு வழிவகுத்ததோடு, ஆன்லைன் மோசடிகளும் அதிகரிக்கக் காரணமாகிவிட்டது. ஆன்லைன் பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளத் தயங்குபவர்கள், வசதியான கட்டண முறையாக கேஷ் ஆன் டெலிவரியை (COD) அதிகம் தேர்ந்தெடுக்கிறார்கள். ஆனால், அப்பாவி நுகர்வோரை ஏமாற்றிப் பணம் பறிக்கத் துடிக்கும் மோசடியாளர்களும் இப்போது இந்த முறையைப் பயன்படுத்தத் தொடங்கிவிட்டனர். அதிகமான மக்கள் தங்கள் தேவைகளுக்காக ஆன்லைன் ஷாப்பிங்கை நாடுவதால், இந்தக் கட்டண முறைக்குப் பின்னால் உள்ள மறைமுக ஆபத்துகள் குறித்து விழிப்புடன் இருப்பது மிகவும் அவசியம்.

இதன் உண்மையான அர்த்தம் என்ன:

டெலிவரிகளும் கேஷ் ஆன் டெலிவரி (COD) ஆர்டர்களும் பெரும்பாலும் மனிதர்களின் அடிப்படை நம்பிக்கையைச் சார்ந்தே நடக்கின்றன. மோசடியாளர்கள் இவற்றை எளிதாகக் குறிவைப்பதற்கான முக்கியக் காரணமும் இதுதான்.

அதிகாரப்பூர்வ கூரியர் ஊழியர்களைப் போல நடித்தோ அல்லது போலி நிறுவனப் பெயர்களைப் பயன்படுத்தியோ மோசடியாளர்கள் உங்களை அணுகுவார்கள். உடனடியாகப் பணம் செலுத்தவும் அல்லது முக்கியமான கணக்கு விவரங்களைப் பகிரவும் உங்களைக் கட்டாயப்படுத்தும் வகையில் ஏதேனும் அவசரக் காரணங்களை அவர்கள் உருவாக்குவார்கள். வழக்கமான டெலிவரி போன்ற தோற்றமும், உங்கள் வீட்டு வாசலில் அவர்கள் உருவாக்கும் இந்த அவசரமும் அழுத்தமும் சேரும்போது, மிகவும் எச்சரிக்கையாக டிஜிட்டல் பேமண்ட் செய்பவர்கள் கூட சற்றுத் தடுமாறி ஏமாறும் சூழல் உருவாகிறது.

COD மோசடிகள் எவ்வாறு செயல்படுகின்றன?

இவை அனைத்தும் மனிதர்களின் அடிப்படை உளவியலோடு தொடர்புடையவை. மக்களிடம் உடனடியாக ஒரு பதற்றத்தையும் அவசர நிலையையும் உருவாக்க மோசடியாளர்கள் ‘சோஷியல் இன்ஜினியரிங்’ உத்திகளைப் பயன்படுத்துகிறார்கள். உண்மைகளை இருமுறை சரிபார்க்க நேரம் எடுத்துக்கொண்டால் பெரிய இழப்பு ஏற்படும் என்று மக்களை நம்ப வைக்கிறார்கள்.. லாபகரமான ஒரு சலுகையை இழந்துவிடுவோமோ அல்லது எதிர்பார்த்த பார்சல் திரும்பிப் போய்விடுமோ என்ற பயத்தைத் தூண்டிவிடுவதே இந்த ஏமாற்று உத்தியின் அடிப்படை. அந்த அவசரத்தில், பெரும்பாலான மக்கள் தாங்கள் வழக்கமாகச் செய்யும் அடிப்படைப் பாதுகாப்புச் சோதனைகளைக் கூடத் தவிர்த்துவிடுகிறார்கள்.

இன்று மோசடியாளர்கள் பயன்படுத்தும் சில பொதுவான டெலிவரி மற்றும் பேமண்ட் பொறிகள்:

1. போலி COD ஆர்டர்கள் மற்றும் உடந்தையாக இருக்கும் கூரியர்கள்

நீங்கள் ஆர்டர் செய்யாத ஒரு “கேஷ் ஆன் டெலிவரி” பார்சலை மோசடியாளர் உங்கள் வீட்டுக்கு அனுப்புவார். முதலில் பணம் செலுத்தும் வரை பார்சலைத் திறக்கவோ அல்லது சரிபார்க்கவோ கூரியர் ஊழியர் அனுமதிக்க மாட்டார். அதற்குப் பதிலாக, அதிகாரப்பூர்வ நிறுவனத்தின் முத்திரை அச்சிடப்பட்ட ஒரு QR கோடை உங்களிடம் கொடுப்பார். நீங்கள் அதை ஸ்கேன் செய்து பணம் செலுத்திய அடுத்த கணமே, உங்கள் பணம் நேரடியாக மோசடியாளரின் தனிப்பட்ட கணக்கிற்குச் சென்றுவிடும்; இறுதியில் உங்களிடம் மதிப்பற்ற வெற்றுப் பெட்டி மட்டுமே மிஞ்சும்.

2. விலை உயர்ந்த பொருட்களுக்கான “நம்ப முடியாத” தள்ளுபடி சலுகைகள்

மோசடியாளர்கள் விலை உயர்ந்த பொருட்களை நம்ப முடியாத தள்ளுபடி விலையில் பட்டியலிட்டு, ஆர்வமுள்ள வாடிக்கையாளர்களை ப்ரீ-பெய்ட் அல்லது கேஷ் ஆன் டெலிவரி முறையில் அதிக அளவில் ஆர்டர் செய்யத் தூண்டுவார்கள். ஆனால் வரும் பார்சலில் மதிப்பற்ற குப்பைகள் மட்டுமே இருக்கும். பணம் கைமாறியவுடன், விற்பனையாளர் எந்தத் தடயமும் இன்றி மாயமாகிவிடுவார்.

COD மோசடிகளை எவ்வாறு கண்டறிவது? கவனிக்க வேண்டிய சூழ்நிலைகள்:


சூழ்நிலை 1: ஆர்டர் செய்யாத பார்சல் மூலம் விரிக்கப்படும் COD வலை

சீமா அலுவலகத்தில் பிஸியாக இருக்கும் நேரத்தில், அவரது வீட்டிற்கு ஒரு டெலிவரி ஏஜென்ட் வருகிறார். வீட்டில் தனியாக இருந்த அவரது அம்மா கதவைத் திறக்கிறார். பார்சல் லேபிளில் சீமாவின் பெயர், தொலைபேசி எண் மற்றும் முகவரி சரியாக அச்சிடப்பட்டிருந்ததால், சீமாதான் ஆர்டர் செய்திருப்பார் என்று நம்பி UPI வழியாக ₹800 பணம் செலுத்திப் பார்சலைப் பெற்றுக்கொள்கிறார். இதுபற்றி அறிந்த சீமா, தனது ஆர்டர் ஹிஸ்டரியைச் சரிபார்த்தபோது தான் அப்படி எந்தப் பொருளையும் வாங்கவில்லை என்பது தெரியவருகிறது. பெட்டியைத் திறந்து பார்த்ததில், காலாவதியான மலிவு விலை அழகுசாதனப் பொருட்கள் மட்டுமே உள்ளே இருந்தன.

சூழ்நிலை 2: உண்மையான ஆர்டரை முந்திக்கொண்டு நடக்கும் COD மோசடி

வழக்கமாக ஆன்லைனில் ஷாப்பிங் செய்யும் ஆர்த்தி, தனக்கு அதிகம் அறிமுகமில்லாத ஒரு இ-காமர்ஸ் இணையதளத்தில் சில பொருட்களை வாங்கி, கேஷ் ஆன் டெலிவரி முறையைத் தேர்ந்தெடுக்கிறார். சில நாட்களுக்குப் பிறகு, அவர் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போது, “அவுட் ஃபார் டெலிவரி” என்ற மெசேஜும், தெரியாத ஒரு கூரியர் நிறுவனத்திடமிருந்து அழைப்பும் வருகிறது. வழக்கமாகவே பார்சல் வருவதற்கு முன்பு ஆன்லைனில் பணம் செலுத்தும் பழக்கமுள்ள ஆர்த்தி, டெலிவரி ஏஜென்ட்டிடம் UPI QR கோடை அனுப்புமாறு கேட்டு, அங்கிருந்தபடியே பணத்தைச் செலுத்திவிட்டு, பார்சலை அடுக்குமாடிக் குடியிருப்பின் செக்யூரிட்டியிடம் கொடுத்துவிட்டுச் செல்லுமாறு கூறுகிறார். அன்று மாலை வீட்டிற்கு வந்து பெட்டியைத் திறந்து பார்த்தபோது, ஆர்டர் பில் எதுவுமின்றி உள்ளே பயனற்ற பொருட்கள் மட்டுமே இருந்தன. உடனே அவர் அந்த ஷாப்பிங் இணையதளத்தில் உள்நுழைந்து பார்த்தபோதுதான், அவரது அசல் ஆர்டர் இன்னும் வந்து சேரவில்லை என்பதை உணர்கிறார். அவரது டெலிவரி விவரங்கள் கசிந்ததாலோ அல்லது தவறாகப் பயன்படுத்தப்பட்டதாலோ, உண்மையான பார்சல் வருவதற்கு முன்பே ஒரு போலி COD பார்சலை அனுப்பி மோசடியாளர்கள் பணத்தைப் பறித்துள்ளனர்.

நடைமுறையில் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன?

இதுபோன்ற டெலிவரி தந்திரங்களில் சிக்குவது சிறிய பண இழப்போடு மட்டும் நின்றுவிடுவதில்லை. இதன் விளைவுகள் பொதுவாக மூன்று முக்கிய வழிகளில் உங்களைப் பாதிக்கும்:

  • நேரடி நிதி இழப்பு: தரமற்ற போலிப் பொருட்கள், காலியான பெட்டிகள் அல்லது கிடைக்கவே கிடைக்காத டிஜிட்டல் சேவைகளுக்காக உங்கள் கஷ்டப்பட்டுச் சம்பாதித்த பணத்தை நேரடியாக இழக்க நேரிடும்.
  • கணக்குப் பாதுகாப்பு பறிபோகுதல்: கால்-ஃபார்வர்டிங் கோடை டயல் செய்யவோ அல்லது OTP-ஐப் பகிரவோ நீங்கள் ஏமாற்றப்பட்டால், மோசடியாளர்கள் உங்கள் மொபைல் எண்ணைத் தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்து, WhatsApp மற்றும் வங்கி செயலிகளைக் கைப்பற்றி இன்னும் பெரிய மோசடிகளில் ஈடுபட வாய்ப்புள்ளது.
  • டிஜிட்டல் பேமண்ட் மீதான நம்பிக்கை குலைதல்: கிரெடிட் கார்டு பரிவர்த்தனைகளில் ‘சார்ஜ்பேக்’ மூலம் பணத்தைத் திரும்பப் பெறுவது எளிது; ஆனால் உடனடியாக நடக்கும் UPI பேமண்ட்களை மாற்ற முடியாது. கணக்கிலிருந்து பணம் வெளியேறிவிட்டால், அதை மீட்பது கிட்டத்தட்ட முடியாத காரியம். இது டிஜிட்டல் பேமண்ட்கள் தரும் எளிமையையும் மன அமைதியையும் சிதைத்துவிடுகிறது.

இதுபோன்ற மோசடிகளைத் தடுக்க, அதிக ஆபத்துள்ள எண்கள் அல்லது வணிகர் பெயர் மாற்றம் போன்ற பாதுகாப்பு சமிக்ஞைகளை PhonePe போன்ற செயலிகள் காட்டுகின்றன. பணம் செலுத்துவதற்கு முன்பு பயனர்கள் சற்று நிதானித்து இந்த எச்சரிக்கைகளைப் படித்தால் மட்டுமே இவை கைகொடுக்கும்.

பாதுகாப்பாக இருப்பது மற்றும் மோசடியாளர்களை விட ஒரு படி முன்னே நிற்பது எப்படி?

மோசடிகளுக்குப் பயந்து ஆன்லைன் ஷாப்பிங் தரும் வசதியை நீங்கள் கைவிடத் தேவையில்லை. கீழே உள்ள சில அடிப்படை விதிகளைக் கடைப்பிடித்தாலே உங்கள் பணத்தையும் தனிப்பட்ட விவரங்களையும் பாதுகாப்பாக வைத்துக்கொள்ளலாம்:

  • திடீர் அவசரத்தை எச்சரிக்கை மணியாகப் பாருங்கள். உடனே பணம் கட்டாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என டெலிவரி ஊழியரோ அல்லது “சப்போர்ட் ஏஜென்ட்டோ” நெருக்கடி கொடுத்தால், ஒரு நிமிடம் நிதானியுங்கள். அவசரமே மோசடியாளர்களின் முக்கிய ஆயுதம்.
  • அதிகாரப்பூர்வ இணையதளத்தில் விவரங்களைச் சரிபார்க்கவும். ஷிப்பிங் தகவல்களை எப்போதும் சம்பந்தப்பட்ட இணையதளத்தில் சரிபார்த்து, நம்பகமான வழிகளில் மட்டுமே டெலிவரி நிலையை உறுதி செய்யுங்கள்.
  • அங்கீகரிக்கப்படாத COD மெசேஜ்களை உடனே புகாரளியுங்கள். நீங்கள் ஆர்டர் செய்யாமலேயே COD மெசேஜ் வந்தால் அதை அலட்சியம் செய்யாமல் உடனடியாகப் புகாரளியுங்கள்; உங்கள் தகவல்கள் திருடப்பட்டுப் பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
  • பார்சலைச் சரிபார்த்த பிறகே பணம் செலுத்துங்கள். பார்சல் உங்கள் கைக்கு வந்து, உள்ளே இருக்கும் பொருளை நேரில் பரிசோதிக்கும் வரை கேஷ் ஆன் டெலிவரி பணத்தை ஒருபோதும் கொடுக்காதீர்கள்.
  • பணம் பெறுபவரின் பெயரை உறுதிப்படுத்தவும். Pay/பணம் செலுத்தவும் பட்டனை அழுத்தும் முன்பு, பணம் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தின் கணக்கிற்குச் செல்கிறதா அல்லது தனிநபரின் UPI ஐடி-க்குச் செல்கிறதா என்பதை கன்ஃபர்மேஷன் திரையில் கவனமாகப் பாருங்கள்.
  • ஆப் எச்சரிக்கைகளைப் புறக்கணிக்காதீர்கள். சந்தேகத்திற்குரிய அல்லது அதிக ஆபத்துள்ள கணக்குகள் குறித்து வங்கிச் செயலி காட்டும் பாதுகாப்பு எச்சரிக்கைகளை வெறுமனே தள்ளிவிடாதீர்கள். அவை உங்கள் பாதுகாப்பிற்காகவே காட்டப்படுகின்றன.
  • பெரிய தொகைகளைத் தனியாக ஒருமுறை சரிபார்க்கவும். அதிகத் தொகையை அனுப்பும்போது, சாட் விண்டோவிலிருந்து வெளியே வந்து, பணம் பெறுபவரின் விவரங்களையும் தொகையையும் நீங்களாகவே மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
  • அறிமுகமில்லாத இணையதளங்களில் கவனமாக இருங்கள். நம்பகத்தன்மை குறைவான, புதிய இணையதளங்களில் ஷாப்பிங் செய்யும் முன், இணையதளத்தின் பெயரைத் தேடிப் பார்த்தும், பயனர்களின் கருத்துகளைப் படித்தும் அதன் உண்மைத்தன்மையைச் சரிபாருங்கள்.

மோசடிக்கு ஆளானால் என்ன செய்வது

நீங்கள் ஒரு மோசடிக்கு இலக்காகியிருப்பதாகச் சந்தேகித்தால், உடனடியாகப் புகாரளிக்கவும். ஒவ்வொரு நொடியும் முக்கியமானது.

PhonePe-வில் புகாரளிக்க:

  • PhonePe வாடிக்கையாளர் சேவை: PhonePe-ஐ 080-68727374 / 022-68727374 என்ற எண்ணில் அழைக்கவும்.
  • உள்நுழைவு தொடர்பான சிக்கல்கள்: https://support.phonepe.com/ வழியாக ஒரு டிக்கெட்டை பதிவு செய்யவும்.
  • சோஷியல் மீடியா புகாரளித்தல்:
  • குறைதீர்க்கும் போர்ட்டல்: PhonePe குறைதீர்க்கும் போர்ட்டலில் புகார் பதிவு செய்யவும்.

அதிகாரிகளிடம் புகாரளித்தல்:

  • சைபர் கிரைம் பிரிவு: சைபர் கிரைம் போர்ட்டலில் புகார் அளிக்கவும் அல்லது 1930 என்ற எண்ணை அழைக்கவும்.
  • தொலைத்தொடர்புத் துறை (DOT): சஞ்சார் சாத்தி போர்ட்டலில் உள்ள சக்ஷு வசதி மூலம் சந்தேகத்திற்கிடமான செய்திகள், அழைப்புகள் அல்லது வாட்ஸ்அப்/டெலிகிராம் மோசடிகளைப் புகாரளிக்கவும்.

முக்கிய நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் இரகசியமான அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனிலிருந்து வராத மின்னஞ்சல்களைப் புறக்கணிக்கவும். நீங்கள் மோசடியைச் சந்தேகித்தால், உடனடியாக அதிகாரிகளைத் தொடர்புகொள்ளவும்.

Keep Reading