Trust & Safety
போலியான பேமண்ட் ஸ்கிரீன்ஷாட்களால் பாதிக்கப்படுவதைத் தவிர்க்க உதவும் விரைவான வழிகாட்டி இதோ
PhonePe Regional|2 min read|23 August, 2023
ஸ்கிரீன்ஷாட் அல்லது ஸ்கேம் ஷாட்? போலி ஸ்கிரீன்ஷாட் மோசடிகள் வணிகர்களுக்கு ஒரு உண்மையான பிரச்சனை. எந்நேரமும் கூட்டமாக உள்ள உணவகங்கள் அல்லது மலிவான பொருட்கள் உள்ள சந்தைகளில்(செகண்ட் ஹேண்ட் பொருட்கள் கடை) நூற்றுக்கணக்கான மக்கள் கூடும்போது விற்பனையாளர்களுக்கு இது குறிப்பாக சிக்கலாக உள்ளது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில் பேமண்ட் அங்கீகாரத்தை சரிபார்ப்பது மிகவும் சவாலான பணியாகும். இது மோசடி செய்பவர்களுக்கு அப்பாவிகளை பலிகடா ஆக்கும் திட்டத்தை வகுக்க சரியான வாய்ப்பை வழங்குகிறது.
ஒரு போலி ஸ்கிரீன்ஷாட் மோசடி செய்பவர், பணம் செலுத்தியதை உறுதிப்படுத்தும் போலி ஸ்கிரீன்ஷாட்டை உருவாக்கி, பணம் செலுத்தப்பட்டதாகவும், பணம் பாதிக்கப்பட்டவரின் கணக்கில் வந்துவிட்டதாகவும் தவறாகக் குறிப்பிடுகிறார்.
ஆன்லைனில் பணம் செலுத்துவதை ஏற்றுக்கொள்வது பண மேலாண்மை மற்றும் பணப்புழக்கம் தொடர்பான முக்கிய பிரச்சனைகளை நிச்சயமாக தீர்க்கும். இருப்பினும், மோசடி நடவடிக்கைகள் குழப்பத்தையும் இழப்பையும் ஏற்படுத்தும். இதை எதிர்த்துப் போராடுவதற்கான வழி, அதிக விழிப்புடன் இருக்க வேண்டும், இதிலிருந்து சிக்குவதை தவிர்க்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.
மோசடி செய்பவர்கள் எப்படி போலி ஸ்கிரீன் ஷாட்களை உருவாக்குகிறார்கள்?
அசல் கட்டண உறுதிப்படுத்தல் செய்தி/ஆப் பக்கத்தைத் திருத்துவதன் மூலம் மோசடி செய்பவர்களை போலி ஸ்கிரீன்ஷாட்களை உருவாக்க அனுமதிக்கும் இணையதளங்கள் மற்றும் பயன்பாடுகளைக் கண்டறிவது எளிது. ஒரு எளிய கூகுள் தேடல் மோசடி செய்பவர்களுக்கு இதுபோன்ற மோசடிகளை நடத்துவதற்கு ஏராளமான விருப்பங்களை வழங்குகிறது.
மோசடி காட்சிகள்
கட்டணத்தை உறுதிப்படுத்த போலி ஸ்கிரீன்ஷாட்கள் பயன்படுத்தப்படும் சில நன்கு அறியப்பட்ட காட்சிகள் கீழே உள்ளன. இப்படிப்பட்ட வலையில் சிக்காமல் இருக்க ஒருமுறை இவற்றைப் படியுங்கள்.
- ஆஃப்லைன் வணிகர்களை தவறாக வழிநடத்துவது: ஒரு வணிகர் மிகவும் பிஸியாக இருக்கும்போது அல்லது பேமண்ட் உறுதிப்படுத்தலைச் சரிபார்ப்பதில் கவனம் செலுத்தாமல் இருக்கும் போது இது வழக்கமாக நடக்கும். வணிகரிடமிருந்து தயாரிப்புகள் அல்லது சேவைகளைப் பெறுவதற்கு மோசடி செய்பவர்கள் இந்த போலி ஸ்கிரீன்ஷாட்டைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள்.
- ஆன்லைன் வணிகங்களில் மோசடி: மற்ற நிகழ்வுகளில், வாடிக்கையாளர் தளத்தை உருவாக்குவதற்கும் நல்ல வாடிக்கையாளர் அனுபவத்தைப் பராமரிப்பதற்கும் ஒவ்வொரு ஆர்டரையும் நம்பியிருக்கும் புதிய இன்ஸ்டாகிராம் பிசினஸ் நடத்துபவர்கள் பேமண்ட் அறிவிப்பைப் பெறாவிட்டாலும், பேமண்ட் உறுதிப்படுத்தல் ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பும் நபரை நம்ப வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அவர்கள் பின்னர் பேமெண்ட்டை பெற்றுவிடுவோம் என்ற நம்பிக்கையில் தயாரிப்பு அல்லது சேவையை வழங்குகிறார்கள். ஆனால் தாங்கள் ஒரு மோசடியாளரால் ஏமாற்றப்பட்டதை அவர்கள் மிகவும் தாமதமாக உணருகின்றனர்.
- பணப்பரிமாற்றத்திற்காக பணம் செலுத்துதல்: மோசடி செய்பவர்கள் பணம் அவசரமாக தேவைப்படுவது போல் நடித்து, பணத்தைக் கையில் கொடுத்தால் ஆன்லைனில் பணம் செலுத்துவதாக கூறி பாதிக்கப்பட்டவரின் கணக்கு விவரங்களை அறிந்து, அவர்களிடம் இருந்து பணத்தை களவாட போலியான பரிவர்த்தனை ஸ்கிரீன்ஷாட்டைக் காட்டுகின்றனர்.
- தவறுதலாக பணம் அனுப்பிவிட்டதாக ஏமாற்றுதல்: தவறுதலாக பணம் அனுப்பப்பட்டதாகக் காட்ட, பாதிக்கப்பட்ட நபருக்கு வாட்ஸ்அப்பில் போலி ஸ்கிரீன்ஷாட்டை அனுப்பி, பணத்தை திருப்பி அனுப்புமாறு மோசடியாளர்கள் கேட்பார்கள். பணத்தை திருப்பி அனுப்ப சம்மதிக்கவில்லை என்றால் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் என்று மிரட்டி பணத்தை கொடுக்குமாறு பாதிக்கப்பட்டவரை வற்புறுத்துகிறார்கள்.
போலி ஸ்கிரீன்ஷாட் மோசடியிலிருந்து உங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்கான வழிகள்
- தயாரிப்பு அல்லது சேவையை ஒப்படைக்கும் முன் எப்போதும் பேமண்ட் உறுதிப்படுத்தல் செய்தியைச் சரிபார்க்கவும். உங்கள் பரிவர்த்தனை வரலாற்றை சரிபார்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம்.
- ஸ்கிரீன்ஷாட்களை மட்டும் நம்ப வேண்டாம். ஸ்கிரீன்ஷாட்கள் பேமெண்ட்களைச் சரிபார்ப்பதில் உதவியாக இருக்கும், ஆனால் அவை எளிதில் பொய்யாக காட்டப்படலாம். அதற்குப் பதிலாக, உங்கள் பதிவுசெய்யப்பட்ட வங்கியிலிருந்து மின்னஞ்சல் அல்லது SMS அறிவிப்புகள் போன்ற பிற பேமண்ட் உறுதிப்படுத்தல் குறிகாட்டிகளைப் பார்க்கவும்.
- ஒரு வணிகருக்கு, குரல் செய்தி மூலம் பணம் செலுத்துவதைத் தெரிவிக்கும் ஸ்மார்ட் ஸ்பீக்கர் தவறாகப் போகாது.
நீங்கள் போலி ஸ்கிரீன்ஷாட் மோசடிக்கு ஆளானால் என்ன செய்ய வேண்டும்
PhonePe இல் ஒரு மோசடி செய்பவரால் நீங்கள் ஏமாற்றப்பட்டால், பின்வரும் வழிகளில் நீங்கள் உடனடியாக சிக்கலை எழுப்பலாம்:
- PhonePe ஆப்: உதவிப் பகுதிக்குச் சென்று, “பரிவர்த்தனையில் சிக்கல் உள்ளது” விருப்பத்தின் கீழ் சிக்கலை எழுப்பவும்.
- PhonePe வாடிக்கையாளர் சேவை எண்: ஒரு சிக்கலைத் தெரிவிக்க PhonePe வாடிக்கையாளர் சேவையை 80–68727374/022–68727374 என்ற எண்ணில் அழைக்கலாம். வாடிக்கையாளர் சேவை முகவர் ஒரு டிக்கெட்டை எழுப்பி உங்கள் பிரச்சினைக்கு உதவுவார்.
- வெப்ஃபார்ம் சமர்ப்பிப்பு: PhonePe இன் வெப்ஃபார்ம், https://support.phonepe.com/ ஐப் பயன்படுத்தி டிக்கெட்டையும் பெறலாம்.
- சோஷியல் மீடியா: PhonePe இன் சோஷியல் மீடியா ஹேண்டில்கள் மூலம் நீங்கள் மோசடி சம்பவங்களைப் புகாரளிக்கலாம்
Twitter — https://twitter.com/PhonePeSupport
Facebook — https://www.facebook.com/OfficialPhonePe - க்ரீவியன்ஸ்: ஏற்கனவே உள்ள புகாரின் மீதான குறையைப் புகாரளிக்க, நீங்கள் https://grievance.phonepe.com/ இல் உள்நுழைந்து, முன்பு எழுப்பப்பட்ட டிக்கெட் ஐடியைப் பகிரலாம்.
- சைபர் செல்: கடைசியாக, மோசடி புகார்களை அருகில் உள்ள சைபர் கிரைம் பிரிவில் புகாரளிக்கலாம் அல்லது https://www.cybercrime.gov.in/ என்ற இணையதளத்தில் புகாரைப் பதிவு செய்யலாம் அல்லது 1930 என்ற சைபர் கிரைம் உதவி மையத்தைத் தொடர்புகொள்ளலாம்.
முக்கியமான நினைவூட்டல் — PhonePe ஒருபோதும் ரகசிய அல்லது தனிப்பட்ட விவரங்களைக் கேட்காது. Phonepe.com டொமைனில் இருந்து வரவில்லை எனில் PhonePe இலிருந்து வந்ததாகக் கூறும் அனைத்து அஞ்சல்களையும் புறக்கணிக்கவும். மோசடி சந்தேகம் இருந்தால், உடனடியாக அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்.