PhonePe Blogs Main Featured Image

Trust & Safety

கோவிட்-19 மோசடிகளுக்கு எதிராக விழிப்புடன் இருப்பது எப்படி

PhonePe Regional|3 min read|10 August, 2021

URL copied to clipboard

இந்தியாவில் கோவிட்-19 இரண்டாவது அலை உருவாகத் தொடங்கியது முதல் மோசடிக்காரர்கள் நூதன முறைகளில் மக்களை ஏமாற்றி முன்பின் தெரியாத அக்கவுண்ட்களுக்கும் மொபைல் நம்பர்களுக்கும் பணம் அனுப்பச்
செய்து வருகிறார்கள். மருத்துவமனை அனுமதி, ஆக்சிஜன், தடுப்பூசி போன்றவற்றைப் பெற உதவுவதாகச் சொல்லி இவர்கள் ஏமாற்றி வருகிறார்கள்.

நீங்கள் விழிப்புடன் இருக்க வேண்டிய சூழ்நிலைகளை விளக்கும் PhonePe வழிகாட்டி இதோ.

கோவிட்-19 தடுப்பூசி முன்பதிவு

முதல் டோஸ் தடுப்பூசிக்கு முன்பதிவு செய்வதாகவோ அரசுத் தகவல்தளங்களில் விவரங்களை மாற்றித் தருவதாகவோ சொல்லி மக்களின் பணத்தை ஏமாற்றிய பல சைபர்கிரைம் மோசடிகள் தெரியவந்துள்ளன. இவர்களின் அணுகுமுறை வெகு எளிமையானதே.

  • குறிப்பாக 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் உட்பட, பொதுமக்களை மொபைலில் அழைத்து கோவிட்-19 தடுப்பூசி முதல் டோஸ் போட்டுக்கொண்டார்களா என்று விசாரிப்பது
  • அதற்கு ஆம் என்று பதிலளிப்பவர்களிடம் தகவல்தளங்களில் விவரத்தைப் பதிவேற்ற வேண்டும் என்று சொல்லி அவர்களுக்கு வரும் OTP எண்ணைப் பகிரச் சொல்வது
  • தடுப்பூசி போட்டுக்கொள்ளவில்லை என்று சொன்னாலும், தடுப்பூசி முன்பதிவுக்காக என்று சொல்லி OTP எண்ணைப் பகிரச் சொல்வது

மேலோட்டமாக இது ஆபத்தில்லாத விஷயமாகத் தெரிந்தாலும், உங்கள் மொபைலுக்கு வரும் OTP எண் மூலம் மோசடிக்காரர்கள் உங்களை ஏமாற்றி உங்கள் மொபைலிலோ செயலியிலோ இருக்கும் முக்கியத் தகவல்களைத் திருட முடியும்.

சமூக வலைதளங்களில் கிடைக்கும் அறிமுகங்கள்

கொரோனா இரண்டாவது அலையின்போது தடுப்பூசி, சிகிச்சை உபகரணங்கள், மருத்துவமனை அனுமதி போன்ற விஷயங்களில் உதவி செய்யம் நோக்கில் சமூக வலைதளங்களில் ஏராளமான அறிமுகங்கள் பகிரப்பட்டன.

இவற்றைப் பயன்படுத்திக்கொண்டு, பல மோசடிக்காரர்கள் ஆக்சிஜன் சிலிண்டர் விற்பனையாளர்கள் என்று சொல்லிக்கொண்டு பலரிடம் பணம் பறித்துவிட்டனர்.

இலவச கோவிட்-19 தடுப்பூசி முகாம் பதிவு என்ற பெயரில் Whatsapp போன்ற வழிகளில் பரவிய போலி மெசேஜ்களில் மக்களின் தனிப்பட்ட தகவல்களைத் திருடும் மால்வேர்களுக்கான இணைப்புகள் இருந்தன. இவற்றைக் கிளிக் செய்தால் மோசடிக்காரர்கள் உங்கள் மொபைலையும் அதில் செயல்பாட்டில் இருக்கும் கணக்குகளையும் அணுக முடியும்.

நோயாளிகளுக்காக ஊசிகளையும் மருந்துகளையும் தேடி ஏற்கெனவே மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளாகி இருந்த உறவினர்களுக்கும் நண்பர்களுக்கும் சமூக வலைதளங்களில் பரவிய போலி விளம்பரங்கள் மேலும் சிரமம் தந்தன.

போலியான Facebook மற்றும் Instagram கணக்குகளை “சரிபார்க்கப்பட்ட” மருந்து மற்றும் ஆக்சிஜன் விற்பனையாளர்கள் என்று அறிமுகப்படுத்திய போலி மருத்துவர்களின் மோசடிச் செயல்களிலும் பலர் பாதிக்கப்பட்டனர்.

மேலும், ஊசிகளுக்கும் அரிதாகக் கிடைக்கும் மருந்துகளுக்கும் முன்பணம் கேட்டுப் பெற்றுக்கொண்ட பிறகு பல மோசடிக்காரர்கள் தங்கள் மொபைல் எண்களை மாற்றிக் கொண்டனர் அல்லது உள்வரும் அழைப்புகளைத் தடுத்து விட்டனர்.

மோசடி வலைதளங்களைக் கண்டறிந்து தவிர்த்து சரியான வழிகளில் கொரோனா நன்கொடைகளை வழங்குவது எப்படி?

கொரோனாவுக்கு எதிராக நாடே ஒன்றுதிரண்டு போராடியபோது, பலரும் நன்கொடைகளை வழங்கி உதவ முன்வந்தார்கள். பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதாகச் சொல்லும் ஏதேனும் ஒரு நிறுவனத்துக்கு நீங்கள் நன்கொடை வழங்க விரும்பினால், அதன் வலைதளத்துக்குச் சென்று அவர்களின் பின்னணியும் தற்போதைய வாக்குறுதிகளும் நம்பும்படி இருக்கின்றனவா என்று சரிபார்க்க வேண்டும்.

வலைதளத்தின் முகவரி ‘HTTPS’ அல்லது ‘HTTP’ என்று தொடங்குகிறதா என்று பாருங்கள். ‘HTTPS’ என்ற முகவரியில் தொடங்கும் வலைதளம் SSL சான்றிதழ் பெற்றிருப்பதோடு ‘HTTP’ என்று தொடங்கும் தளங்களைவிட மிகப் பாதுகாப்பாக இருக்கும். இருந்தாலும், நீங்கள் நன்கொடை வழங்க விரும்பும் நிறுவனத்தின் பின்னணி உறுதியாகத் தெரியவில்லை என்றாலோ உங்கள் பணம் சரிபார்க்கப்பட்ட நிறுவனங்களின் மூலம் பிறருக்கு உதவ வேண்டும் என்று நினைத்தாலோ, PhonePe செயலியின் ‘நன்கொடைகள்’ பிரிவின் மூலம் நீங்கள் நன்கொடை வழங்கலாம்.

PhonePe செயலியின் மூலம் நன்கொடை அளிப்பது எப்படி?

உங்கள் நன்கொடைகள் சரிபார்க்கப்பட்ட NGOக்களுக்குச் செல்வதை உறுதிப்படுத்தி, உங்களுக்கு உதவியாக அந்நிறுவனங்களின் பட்டியலையும் PhonePe நிறுவனம் தன் தளத்தில் வெளியிட்டுள்ளது. PhonePe செயலியில் பட்டியலிடப்பட்டிருக்கும் ஒரு NGO நிறுவனத்துக்குப் பின்வருமாறு நன்கொடை அளிக்கலாம்.

படி 1: உங்கள் PhonePe முகப்புத் திரையில் ‘ரீசார்ஜ் & பில் பேமண்ட்’ என்பதன் கீழுள்ள ‘நன்கொடை’ பிரிவைத் தட்டவும்.

படி 2: கொடுக்கப்பட்டுள்ள NGO அல்லது பிற நிறுவனங்களின் பட்டியலில் இருந்தோ நீங்கள் நன்கொடை வழங்க விரும்பும் நோக்கத்தின்படியோ தேர்வு செய்யவும்.

படி 3: உங்கள் பெயரையும் மின்னஞ்சல் முகவரியையும் குறிப்பிடவும்.

படி 4: நன்கொடைத் தொகையை உள்ளிடவும்.

படி 5: வழங்கப்பட்டுள்ள பேமண்ட் வகைகளில் ஒன்றைத் தேர்ந்தெடுக்கவும். UPI, டெபிட் கார்டு அல்லது PhonePe வாலட் மூலம் நன்கொடை அளிக்கலாம்.

படி 6: ‘நன்கொடை’ என்பதைத் தட்டி பேமண்ட்டை உறுதி செய்யவும்.

மோசடி மொபைல் எண்களை PhonePe செயலியில் கண்டறிந்து தடுப்பது எப்படி?

தனிப்பட்ட விவரங்களைக் கேட்டோ நம்பகமற்ற ரிவார்டுகளைத் தருவதாகவோ வரும் மோசடி அழைப்புகளை நீங்கள் கவனித்துத் தடுப்பது பிறருக்கும் உதவலாம். சிகிச்சைக்காகவோ ஆக்சிஜன் தேவைக்காகவோ உங்களுக்கு வரும் அழைப்புகள் அல்லது அறிமுகங்களை நீங்கள் சந்தேகித்தால், https://www.phonepe.com/security/covid-frauds/ என்ற தளத்தில் பிறர் இதுவரை கண்டறிந்து புகாரளித்துள்ள மோசடி எண்களின் பட்டியலைச் சரிபார்த்துக் கொள்ளலாம். உங்களுக்கு வந்த மோசடி எண்ணை இங்கு பதிவுசெய்து பிறருக்கும் உதவலாம்.

நினைவிருக்கட்டும்: PhonePe உங்கள் தனிப்பட்ட விவரங்களைக் கேட்கும் எந்த அழைப்பையும் செய்யாது. மேலும் OTP/CVV அல்லது UPI MPIN போன்ற முக்கியமான தகவல்களையும் பகிரச் சொல்லாது.

மோசடிகளுக்கு எதிராகச் செய்ய வேண்டியவையும் செய்யக் கூடாதவையும்

செய்ய வேண்டியவை: மோசடி அழைப்புகளைத் தவிர்ப்பது கடினமல்ல. நீங்கள் ‘செய்ய வேண்டியவை’ எல்லாம்,

  • முன்பின் தெரியாதவருக்குப் பணம் அனுப்பும் முன்பு பெறுநர் விவரங்களைச் சரிபார்த்திடுங்கள்.
  • பணத்தை அனுப்பும் முன்பே அக்கவுண்ட் வைத்திருப்பவரின் பெயர், வங்கிக்கணக்கு விவரங்கள், தொடர்பு விவரங்கள் போன்ற பெறுநர் விவரங்களைச் சரிபார்த்திடுங்கள்.
  • யாரோ சொல்வதைக் கேட்டு எந்த மூன்றாம் தரப்புச் செயலியையும் நிறுவாதீர்கள். பிளே ஸ்டோர் அல்லது ஆப்ஸ்டோர் மூலம் சரிபார்க்கப்பட்ட நம்பகமான செயலிகளை மட்டுமே பயன்படுத்துங்கள்.
  • முன்பின் தெரியாத ஒருவருக்குத் தவறுதலாகப் பணம் அனுப்பிவிட்டால் உடனே அதைப்பற்றி வங்கி அல்லது சைபர்செல்லிடம் தெரிவித்திடுங்கள்.
  • உங்கள் மொபைலில் பெறுநரின் எண்ணைத் தடுப்பதோடு PhonePe செயலியில் அவரின் கணக்கையும் தடுத்திடுங்கள். இதனால் இனிமேல் அவர் உங்களிடம் பணம் கேட்க முடியாது.
  • நிகழந்த மோசடியை PhonePe செயலியில் உள்நுழைந்து “உதவி” பிரிவிலுள்ள “கணக்குப் பாதுகாப்பு & மோசடிகளைப் புகார் செய்தல்” என்பதில் தெரிவித்திடுங்கள். support.phonepe.com என்பதிலும் குறிப்பிடலாம்.
  • ஒருபோதும் UPI செயலியின் மூலம் பணத்தைப் பெற UPI பின்னை உள்ளிட வேண்டாம் என்பதை நினைவில் வைத்திருங்கள்.

செய்யக் கூடாதவை: உங்கள் பணம் மோசடிக்காரர்களுக்குச் செல்வதைத் தடுக்க,

  • UPI பின் அல்லது OTP எண்ணை ஒருபோதும் பிறரிடம் பகிராதீர்கள். PhonePe ஊழியர்கள் ஒருபோதும் தனிப்பட்ட விவரங்களைக் கேட்க மாட்டார்கள்.
  • Twitter, Facebook, LinkedIn, Instagram ஹேண்டில்கள் போன்றவை உட்பட உங்கள் சமூக வலைதள விவரங்களைப் பொதுவில் பகிராதீர்கள்.
  • முன்பின் தெரியாத வணிகர்கள் அல்லது நிறுவனங்கள் வழங்கும் நம்பமுடியாத சலுகைகளுக்கு ஏமாந்து விடாதீர்கள்.
  • உங்கள் வங்கி விவரங்களைக் கேட்கும் எந்தப் படிவத்தையும் நிரப்பாதீர்கள்.
  • பணம் அனுப்பவோ பெறவோ Screen Share, Anydesk, Teamviewer போன்ற மூன்றாம் தரப்புச் செயலிகளை நிறுவுவதைத் தவிர்த்திடுங்கள்.
  • பொதுவான தேடல் முடிவுகளிலும் சமூக வலைதளங்களிலும் கிடைக்கும் உதவி எண்களை அழைக்காதீர்கள். மாறாக, உதவி எண்களை அதிகாரப்பூர்வ வலைதளங்களில் தேடுங்கள்.
  • முன்பின் தெரியாதவர்கள் அனுப்பும் மெசேஜ்களுக்கோ மின்னஞ்சல்களுக்கோ பதில் அனுப்பாதீர்கள், அவற்றில் உள்ள இணைப்புகளைக் கிளிக் செய்யாதீர்கள்.

PhonePe வாடிக்கையாளர் சேவையைத் தொடர்புகொள்வதற்கான ஒரே வழி https://support.phonepe.com/ என்ற இணைப்பைக் கிளிக் செய்வது அல்லது 0806–8727–374 / 0226–8727–374 ஆகிய எண்களில் எங்கள் 24*7 வாடிக்கையாளர் சேவை மைய அதிகாரிகளைத் தொடர்புகொள்வது மட்டுமே.

நாங்கள் உதவுகிறோம்

பின்வரும் சமூக வலைதளங்களில் எங்களைத் தொடர்புகொள்வதற்கான அதிகாரப்பூர்வக் கணக்குகள் இதோ.

Keep Reading